ண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரை பற்றிய சர்ச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சித்தவர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதே நேரம், மன்னிப்பு கேட்ட வைரமுத்து, தன்னைப்பற்றி அவதூறாக பேசியவர்கள் குறித்து மவுனம் காக்கிறார்.

வைரமுத்து

ந்த நிலையில், வைரமுத்துவுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார் முகநூல் பதிவர் மானாமதுரை மருதுபாண்டியர். அந்தக் கடிதம்.

“நமக்கு ஏற்பட்ட இடைவெளி வெறும் நகக்கீறல்தான். ஏற்பட்ட இடம் கண்ணின் விழிப்படலம் அல்லவா.. இது,  எங்கே – யாருக்குச் சொன்னீர்கள் என நினைவு இருக்கும். இன்று உங்களை பார்த்து நாங்கள் சொல்கிறோம்.

ஈழப்பிரச்சனை நடந்த பொழுது அனைத்து கவிஞர்களின் எழுத்தாணிகளும் இரத்தத்தை ஊற்றி கவி வடிக்க, நீரோ புகழுரை எழுதி கொண்டிருந்தீர். எல்லா துன்பங்களும் முடிந்த பிறகு அயல்நாட்டில் எதோ ஒரு மூலையில், “இனி பிள்ளைகளுக்கு அ என்றால் அம்மா, ஆ என்றால் ஆடு என சொல்லி கொடுக்க வேண்டாம். அ என்றால் அம்மா, ஆ என்றால் ஆயுதம், இ என்றால் இனம், ஈ என்றால் ஈழம் என சொல்லிக் கொடுப்போம்” என உங்கள் வார்த்தை வீரியத்தை காட்டினீர்கள்.

நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் உங்கள் பேனா ஊமையாகிவிடும். நீங்கள் யாருக்காக புகழ்ப்பா பாடினீர்களோ அவர்கள் இப்பொழுதுதான் திருப்பாவை படித்து கொண்டு இருக்கிறார்களாம். அர்த்தம் புரிந்தவுடன் அவைக்கு வருவார்களாம். அதுவரை காத்திருக்காமல் வருத்தம் தெரிவித்து விட்டீர்கள்.

ஆண்டாள் பற்றி எழுதிய வார்த்தைகளில் துளியும் தவறு இல்லை. பாடலை விளக்கி ஒரு ஆராய்சியாளன் எதை புறம் தள்ளி எதை சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி உள்ளீர்கள். அரைகுறையாய் பிறந்த பயல்கள் எல்லாம் அலறி துடிக்கையில், தங்களை பற்றி அறிந்த நாங்கள் தங்களை போலவே இருந்து விட்டோம்.

ஆம். நம் நகக்கீறல் பட்டது நம் விழிப்படலம் அல்லவா..

அடுத்த வரி..

“நாம் இருவரும் ஓடிப்பிடித்து விளையாடுவோம். நான் ஒடுவேன் நீ பிடிப்பாய். நீ ஒடுவாய் நான் பிடிப்பேன். அன்று ஒரே திசையில் ஓடினோம். பிடித்தோம். ஆனால் இன்று வெவ்வேறு திசைகளில் ஒடுகிறோம். உலகம் உருண்டை என்றாவது ஒன்று சேர்வோம்” என சொல்லியிருப்பீர்கள்.

ஆமாம்… நீங்கள் பணம் பட்டம் தேடி வேறு திசையில் ஓடினீர்கள். இங்கே பலர் இனம் என ஒரு திசையில் ஓடினார்கள். உலகம் உருண்டை. சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

தேசிய விருதுகள் வாங்கினானல்தான் உன்னை கவி என ஒத்துக்கொள்வார்களா?

உன் வரிக்கு மயங்காதவன் மானிடனே அல்ல..

புகழைத் தேடி ஓடியது போதும். தேசிய விருது வாங்காத சிவாஜியை நடிகன் இல்லை என்று சொன்னால் நாடு துப்பும். கவியரசரை மிஞ்ச வேண்டும் என ஒரே காரணத்திற்காக உங்களை கவிப்பேரரசு என, “ஆண்டவர்” அழைத்திருக்கலாம். ஆனால் ஆளும் அரசை ஆண்மையுடன் எதிர்த்த கண்ணதாசன் என்றால் நாடு பிரமிக்கும்.

பட்டங்கள் வேண்டாம். வாழ்வளித்த தமிழுக்காக இனிமேலாவது திருவாய் திறவுங்கள்… அலைகடலாய் எழுங்க..

வெளிச்சத்தில் தொலைத்துவிட்டு திரையரங்கு எனும் இருட்டறையில் தலைவனை தேடும் குருட்டு உலகம் என எங்களுக்கு சொல்லிக்கொடுத்து விட்டு புகழை அதிகார வர்க்கம் எனும் இருட்டறையில் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்.

தமிழ் எனும் வெண்புரவி தேரில் புறப்படுங்கள். தெருநாய்கள் குரைச்சல் ஒலி உங்களை நெருங்காது.

தமிழ் உணர்வோடு வாருங்கள்…!