டெல்லி
தமக்கு என்ன நடந்தாலும் தமது உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.
தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. டெல்லி அரசு அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி கடந்த 21-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் இன்று நான்காவது நாளாக நீடிப்பதால் அவரது உடல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், தனது கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார்.
இன்று இதுபற்றி அதிஷி இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்,
“உண்ணாவிரதத்தால் என் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து, உடல் எடை குறைந்துவிட்டது. கீட்டோன் அளவு மிக அதிகமாக உள்ளது. இது எனது உடல்நிலையை கடுமையாக பாதிக்கும். உடல்ரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அரியானா அரசு தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன்.
நேற்று மருத்துவர்கள் எனது உடல்நிலையை பரிசோதனை செய்தனர். அரியானா அரசு கடந்த மூன்று வாரங்களாக யமுனை நீரில் டெல்லியின் பங்கை ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன்கள் என்ற அளவுக்கு குறைத்துள்ளது. இதனால், டெல்லிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.”
என்ற் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி குழுவுடன் டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா நேற்று ஆலோசனை நடத்திய பின்னர், ‘டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது பற்றி பரிசீலனை செய்வதாக அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உறுதி அளித்திருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.