ஸ்டேடியத்தில் பயிற்சி செய்பவர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடை பழக செல்வதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குற்றச்சாட்டு… டெல்லி முதல்வர் அதிரடி…

Must read

டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு மேல் பயிற்சியில் ஈடுபடுபவர்களை விரட்டியடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது நாயுடன் ஸ்டேடியத்தில் நடைபழகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி வருவாய் துறை முதன்மை செயலாளர் சஞ்சீவ் கிர்வார் தினமும் மாலை தனது நாயுடன் வந்து ஸ்டேடியத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக மாலை 7 மணிக்கு மேல் அங்கு பயிற்சியில் ஈடுபடும் நபர்களை ஸ்டேடியத்தின் காவலாளிகள் விசிலடித்து விரட்டி விடுவதாக அங்கு பயிற்சியில் ஈடுபடுபவர்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பான உண்மையை கண்டறிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிருபர்கள் மேற்கொண்ட முயற்சியில், மாலையில் அனைவரும் விரட்டியடிக்கப்படுவதை நேரடியாக பார்த்துள்ளனர்.

இதுகுறித்து அந்த மைதானத்தின் மேலாளரிடம் விசாரித்த போது, இது அரசு மைதானம் என்பதாலும் தாங்கள் அரசு ஊழியர்கள் என்பதாலும் 7 மணியுடன் தங்கள் பணியை முடித்துக் கொண்டு பூட்டிவிட்டு செல்வதாக கூறினார்.

7 மணிக்கு பூட்ட சொல்லி அரசு உத்தரவு ஏதும் உள்ளதா என்றும் பக்கத்தில் இருக்கும் மற்ற மைதானங்கள் இதுபோல் பூட்டுவதில்லை என்பது குறித்தும் கேட்டதற்கு அவரிடம் உரிய பதில் இல்லை.

செவ்வாயன்று மாலை 7:30 மணிக்கு மைதானத்திற்கு வந்த சஞ்சீவ் கிர்வார் தனது நாயை மைதானத்திற்குள் சுற்றிவர செய்ததை பார்த்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் விசாரித்ததில், தான் எந்த ஒரு நபரையும் வெளியில் விரட்டவில்லை என்றும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியானதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள மைதானங்கள் அனைத்தும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள திறந்து வைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

More articles

Latest article