மும்பை

வாகன நிறுத்துமிடத்தில் இருந்து 1 கிமீ தூரம் வரை வெளியில் வாகனத்தை நிறுத்தினால் மும்பை மாநகராட்சி ரூ. 10000 அபராதம் விதிக்க உள்ளது.

மும்பை நகரம் மிகவும்  பரபரப்பான நகரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் ஒன்றாக உள்ளது.   குறிப்பாக சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தும் பழக்கம் பலரிடம் உள்ளது.   இதனால் நெரிசல் அதிகரிக்கிறது.   இதை தடுக்க மும்பை பெருநகர மாநகாராட்சி 146 வாகன நிறுத்துமிடங்களை அமைத்துள்ளது.

இந்த நிறுத்துமிடங்களில் 34808 இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.   ஆயினும் பல நேரங்களில் மக்கள் தங்கள் வாகனங்களை சாலை ஓரங்களில் விடுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது..   அதை ஒட்டி வாகன நிறுத்துமிடங்களுக்கு வெளியே சுமார் 1 கிமீ தூரம் வரை வாகனங்களை நிறுத்துவோருக்கு ரூ. 10000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இந்த சட்டம் வரும் ஜூலை 7 முதல் அமுலுக்கு வருகிறது.  இது குறித்து மும்பை பெருநகர மாநகராட்சி தலைவர் பிரவீன் பரதேசி, “இந்த உத்தரவு அமுலுக்கு வந்த பிறகு வாகனத்தை வெளியில் நிறுத்துவோருக்கு காவல்துறையினர் உடனடி அபராதம் விதிக்க உள்ளனர்.  தற்போது அத்துமீறி கட்டிடம் கட்டினால் அதை இடித்து அந்த இடிபாடுகளை அகற்றும் கட்டணம் கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

அதே பாணியில் வாகனங்களை நிறுத்துவோரது வாகனங்களை அகற்றி இழுத்துச் செல்ல தனியார் வாகனங்கள் விதிக்கும் கட்டணத்தை வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்க உள்ளோம்.   இது கூடுதல் அபராதமாகும்.   இந்த கூடுதல் அபராதம் ரூ.1000 லிருந்து ரூ.10000 வரை இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.