ஜெய்பூர்:
இந்துக்களின் அச்சுறுத்தல் காரணமாக மேற்கு ராஜஸ்தானில் வசித்து வந்த 20 முஸ்லிம் கு டும்பத்தினர் ஊரில் இருந்து வெளியேறியுள்ளனர். ஜெய்சமர் பகுதியில் இவர்கள் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தற்காலிக முகாம் அமைத்து கொடுத்துள்ளது.
இங்கு தங்கியுள்ள அவர்களுக்கு கடந்த 2 நாட்களாக உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும், முகாமில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தால் குழந்தைகளும், பெண்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
20 குடும்பங்களை சேர்ந்த 150 பேரும் தங்களது வீடு அமைந்துள்ள தன்டல் பகுதிக்கு செல்ல விரும்பவில்லை. இந்த பகுதி ஜெய்பூரில் இருந்து 700 கி.மீ., தொலைவில் உள்ளது. தங்களை பாதுகாப்பான வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கிராமத்தில் வசித்து வந்த முஸ்லிம் பாடகர் ஆமத்கான்ர் அதே பகுதியை சேர்ந்த பூசாரியான ரமேஷ் சுதர் மற்றும் அவரது சகோதரர்களால் கொலை செய்யப்பட்டார். ரமேஷ் சுதர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சகோதரர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. அப்போது அந்த ஏழை முஸ்லிம் பாடகரான ஆமத்கான் (வயது 45) என்பவர் பாடியுள்ளார். இதை தொடர்ந்து மறுநாள் ஆமத்கான் வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இத தொடர்பாக போலீசில் புகார் அளிக்க கூடாது என ஆமத்கான் குடும்பத்தினரை சிலர் மிரட்டியுள்ளனர்.
இதனால் போலீசுக்கு தெரியாமல் ஆமத்கான் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்துவிட்டனர். அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் ஆமத்கானில் உறவினர்கள் சிலர் வந்து புகார் அளிக்குமாறு அவரது குடும்பத்தினரை வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சுதர் மற்றும் அவரது சகோதரரகள் மீது போலீசில் புகார் அளித்தனர்.
இதைதொடர்ந்து அந்த கிராமத்தில் வசித்த 20 முஸ்லிம் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் அருகில் உள்ள பாலாத் கிராமத்தில் தஞ்சமடைந்தனர். இதில் சிலர் ஜெய்சல்மர் மாவட்ட கலெக்டர் மீனாவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் நகராட்சி சார்பில் நடத்தப்படும் ஆதரவற்றோருக்கான இல்லத்தில் அவர்களை தங்கவைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அவர்களுக்கு உணவு வழங்கவும் நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். இது குறித்து அங்கு தங்கியுள்ள தரீப் கான் என்பவர் கூறுகையில், ‘‘உள்ளூர் மக்கள் மூலம் உணவு ஏற்பாடு செய்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்காது’’ என்றார்.
நகராட்சி ஆணையர் ஜாபர் சிங் கூறுகையில், ‘‘இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு வழங்க எங்களிடம் எவ்வித நிதி ஓதுக்கீடும் இல்லை. கடந்த திங்கள் கிழமை உணவு வழங்கினோம். நிதி பற்றாகுறை காரணமாக தினமும் உணவு வழங்க இயலாது’’ என்றார்.
இங்குள்ள நிலமை கலெக்டர் மீனாவுக்கு தெரியவில்லை. ‘‘அவர்கள் மீண்டும் கிராமத்திற்கு திரும்ப விரும்புகிறார்களா? இல்லையா? என்பதை நேரில் தெரிந்து கொள்ள முடிவு செய்துள்ளேன். இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கிராமத்திற்கு திரும்பினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’’ என்று கலெக்டர் தெரிவித்தார். தன்டல் கிராமத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வட்டாட்சியரை கலெக்டர் அனுப்பியுள்ளார்.