சென்னை
சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு நாய் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை குரைத்து மிரட்டி உள்ளே செல்ல வைக்கிறது.
நாட்டில் உள்ள பல ரெயில் நிலையங்களில் நாய்கள் திரிவது சாதாரணமான ஒன்றாகும். இதைப் பலர் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு நாய் இதற்கு விதிவிலக்காக இருந்து வருகிறது. கருப்பும் இள பிரவுன் நிறமும் கொண்ட இந்த நாயைப் பலரும் கவனிக்கத் தக்க பணிகளை செய்து வருகிறது.
சுமார் 2 வருடங்களுக்கு முன்பு சின்னப்பொண்ணு என அழைக்கப்படும் இந்த நாய் ஆதரவின்றி பூங்கா ரெயில் நிலையத்தில் விடப்பட்டுள்ளது. இந்த நாய் மற்ற நாய்களைப் போல் அல்லாமல் ரெயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினருக்கு உதவும் பணியை தானே எடுத்துக் கொண்டுள்ளது. அவர்கள் பணி புரியும் நேரம் அவர்களுடன் செல்வதை முதலில் வழக்கமாகக் கொண்டுள்ளது.
அதன் பிறகு சிறிது சிறிதாகத் தானே பணியில் இறங்கி உள்ளது. ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இல்லாத வேளையில் தண்டவாளத்தைக் கடக்க முயலும் பயணிகளைப் பார்த்துக் குரைத்துத் தடுப்பது, படிக்கட்டில் பயணம் செய்வோரைப் பார்த்துக் குரைத்து மிரட்டி உள்ளே செல்ல வைப்பது என பாதுகாப்புப் பணிகளைப் புரிந்து வருகிறது.
பூங்கா ரெயில்வே நிலையத்தில் உள்ள கடையில் பணிபுரியும் சுரேஷ் பாபு மற்றும் அன்பழகன், “இந்த நாய் பயணிகளை ஒழுங்கு படுத்துவதில் ரெயில்வே காவலர்களுக்கு உதவுவது மட்டுமின்றி ஒருமுறை திருடனை விரட்டி பிடித்துள்ளது. ஒரு பயணியிடம் இருந்து மொபைலை பிடுங்கிக் கொண்டு ஓடிய திருடனை விரட்டி பிடித்துள்ளது.
இந்த நாயின் உரிமையாளர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். அவர் வசிக்கும் வீட்டின் சொந்தக்காரர் நாயை வளர்க்க அனுமதிக்காததால் இங்குக் கொண்டு வந்து விட்டுள்ளார். மாதம் ஒருமுறை வந்து நாயைப் பார்த்து விட்டுச் செல்வார். அவர் சொல்லித்தான் இந்த நாயின் பெயர் சின்னப்பொண்ணு என்பது எங்களுக்குத் தெரிய வந்தது” என கூறுகின்றனர்.