பெங்களூரு

பெங்களூரு நகரில் கடும் பனி மூட்டம் உள்ளதால் கோ ஏர் நிறுவன விமானம் ஓடுபாதையில் இருந்து புல் தரையில் இறங்கி உள்ளது.

மாதிரி புகைப்படம்

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரம் மற்றும் பல  மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகக் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. நாக்பூரில் இருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட கோ-ஏர்  நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், காலை 7.35 மணிக்குப் பெங்களூரு கெம்பே கவுடா  சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டி இருந்தது. . ஆனால் காலை வேளையில் கடுமையான பனி  இருந்ததின் காரணமாகத் தரையிறங்க முடியாமல் சில நிமிடம் வானில்  பறந்துகொண்டிருந்தது.

கட்டுப்பாட்டு அறையில் இருந்து  சிக்னல் கிளியரன்ஸ் கிடைத்ததால், விமானம் தரையிறக்கப்பட்டது.  ஆயினும்  குறிப்பிட்ட இடத்தில் இறங்காமல் ஓடுதளத்தில் தாறுமாறாக ஓடிய விமானம், புல்  தரையை உரசிக் கொண்டு சென்றது. அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக சமாளித்துக்  கொண்டு  டேக்அப் செய்து மீண்டும் வானில் பறந்தார்.

கடும் பனி  இருந்ததின் காரணமாக அந்த கோ-ஏர் விமானம் ஐதராபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி  அனுப்பப்பட்டது.   புல்தரையில் விமானம் இறங்கியது குறித்து விமானி தகவல் தெரிவிக்கவில்லை.  இந்த விமானம் அங்குத் தரையிறங்கியதும், அதன் சக்கரத்தில் மண்  மற்றும் புற்கள் இருந்ததைக் கவனித்த பொறியாளர்கள் உடனடியாக மேலதிகாரிகளின்  கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

மேலதிகாரிகள் விமானியிடம் விசாரித்தபோது,  நடந்த உண்மையைக் கூறியுள்ளார்.   இந்த  விமானியின் சாமர்த்தியத்தால் 180  பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருந்தாலும் நடந்த விவரத்தைச் சொல்லாமல்  மறைத்தது தொடர்பாக உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன்  அந்த விமானம் புறப்பட்டது முதல் தரையிறங்கியது வரை கட்டுப்பாட்டு அறையுடன் விமானி கொண்டிருந்த தொடர்பு உள்படப் பல விவரங்களைச் சேகரித்து வருகிறார்கள்.

மத்திய விமான இயக்குநரக (டிஜிசிஏ) அதிகாரிகள் விரைவில்  இதுதொடர்பாக விசாரிக்க உள்ளனர். அந்த விசாரணை முடிக்கும் வரை விமானிக்குப் பணி  எதுவும் ஒதுக்கீடு செய்யாமல் காத்திருப்பு பட்டியலில் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்தும் இவ்வளவு தாமதமாகத் தகவல் வெளி வந்துள்ளது விமான நிலைய வட்டாரத்தில்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோ-ஏர் விமான நிறுவனம் இதுவரை  எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.