அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் முக்கிய நகரமான சின்சினாட்டியை தளமாகக் கொண்ட ஆஸ்ட்ரோனமர் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அந்நிறுவனத்தின் மனிதவள அதிகாரி (HR) உடனான ரகசிய தொடர்பு வெளியானதால் ராஜினாமா செய்தார்.
ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பெரோன் மற்றும் மனிதவள தலைமை அதிகாரி கிறிஸ்டின் கபோட் இருவரும் பொதுவெளியில் நெருக்கமாக இருந்த வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உலகம் முழுவதும் பேசுபொருளானது.

பாஸ்டன் நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர்.
கேலரியில் நின்றுகொண்டிருந்த கிறிஸ்டின் கபோட்டை ஆண்டி பெரோன் பின்னால் இருந்தபடி நெருக்கமாக கட்டிப்பிடித்து இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நிகழ்ச்சியை படம்பிடிக்க வைக்கப்பட்ட கேமரா ஒன்று இவர்கள் பக்கம் திரும்பிய நிலையில் அந்த ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தது காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து தனது முகத்தை மூடிக்கொண்டு கிறிஸ்டின் கபோட், ஆண்டி பெரோனிடம் இருந்து விலகிச் செல்ல ஆண்டி பெரோனும் தயக்கத்துடன் இருக்கையில் அமர்ந்தார்.

இந்த காட்சியை படம்பிடித்த அந்த இசைநிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களில் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் அதைப் பதிவிட ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் ஆண்டி பெரோன் மற்றும் கிறிஸ்டின் கபோட் இருவரின் நடவடிக்கை சமூக வலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில், இருவரும் அந்நிறுவனத்தில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை அடுத்து ஆண்டி பெரோன் தனது CEO பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆண்டி பெரோனுக்கு மேகன் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் அதேபோல் கிறிஸ்டின் கபோட், கென்னத் தோர்ன்பி என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.