சென்னை
பொதுமக்கள் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடவேண்டும் என அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் பொருட்களை வாங்க அதிக அளவில் கூட்டம் கூடுகின்றனர். நகரின் பல இடங்களிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் பொருட்களை வாங்க வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதையொட்டி சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் காவல்துறையினர் நடை ரோந்து சென்று மக்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதன் அடிப்படையில் அம்பத்தூர் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையில் நேற்று இரவு நடை ரோந்து நடைபெற்றது.
இது ஆவடி ரயில் நிலைய சாலை, புது ராணுவ சாலை, நேரு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
அப்போது துணை ஆணையர் தீபா சத்யன், “நீண்ட ஊரடங்குக்குப் பிறகு இந்த ஆண்டு தீபாவளி வருகிறது. எனவே இது வித்தியாசமானது. பொருட்களை வாங்க அனைவரும் ஒரே இடத்தில் கூட அதிக அளவில் வாய்ப்புள்ளது.
ஆகவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கிருமி நாசினி உபயோகம், சமூக விலகல், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றுடன் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.