சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2006-2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தூசி தட்டப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தற்போதைய திமுக அரசின் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அறிக்கையை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து மேற்கண்ட உத்தரவை எதிர்த்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.. ஆனால், நீதிபதி இதுபோன்ற வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரில் செயல் பச்சோந்தி தனமாக உள்ளது என கடுமையாக விமர்சித்ததுடன், இந்த வழக்குகளை தானே விசாரிப்பதாக கூறி விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து,. சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து இரு அமைச்சர்களையும் விடுவித்த உத்தரவை ரத்து செய்ததோடு, வழக்கில் விடுவிக்க வேண்டும் என்ற மனுவையும் தள்ளுபடி செய்து கடந்த ஆக.7-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு 2011-ம் ஆண்டு தொடர்பானது என்பதால் ’தினந்தோறும் விசாரணை’ என்ற அடிப்படையில் நடத்தி விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவை எதிர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கோரிக்கை வைத்துள்ளார்.