சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதும், 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில், சுமார் 4ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது, எடப்பாடி தலைமையிலான அரசு , சட்டமன்ற தேர்தலை கவனத்தில்கொண்டு, மக்களை ஏமாற்றும் வகையில், 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் மறைந்த  ஜெயலலிதா அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, அவர் 6வதுமுறையாக கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றதும், முதல் நடவடிகைக்காயக 500 மதுக்கடைகளை மூட அவர் நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என உறுதி கூறினார்.

அவரது  மறைவுக்கு பிறகு முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும்,  அவரது வழியில், முதல்வராக பதவி ஏற்ற தொடக்கத்தில்  மேலும் 500 மதுக்கடைகளை மூடினார். ஆனால், அதற்கு பதிலாக பல இடங்களிலும் மேலும் ஏராளமான கடைகளையும் திறந்து வந்தார்.  தற்போது தமிழகத்தில் 5370 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக மதுபான பார்கள் திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழகத்தில்  மேலும் 500-ஐ குறைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.  படிப்படியான மது விலக்கு கொள்கையின் அடிப்படையில் மதுக்கடைகளின் எண்ணிக்கையையும் நேரத்தையும் குறைப்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

மக்களிடையே ஆட்சிக்கு நல்லப்பெயர் கிடைக்கும், அதனால் பெண்களின் வாக்குகளை அள்ளலாம் என்ற நோக்கத்தில், மதுபானக்கடைகளை  குறைக்க எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக, விற்பனை குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும்,  முதல்வர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும்,  டாஸ்மாக் கடைகளை குறைப்பது தொடர்பாக அறிவிப்பார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

500 டாஸ்மாக் கடைகள் மூடல், கடை நேரம் குறைப்பு: ஜெ.வின் முதல் அதிரடி! பத்திரிகை டாட் காம் சொன்னது நடந்தது