சென்னை; நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், சென்னையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பல அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை 1,384 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸார் பாதுகாத்து வருகின்றனர். வட சென்னையில் 280, தென் சென்னையில் 342, மத்திய சென்னையில் 300 என மொத்தம் 922 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாளை காலை 8.30 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து, வாக்கு எண்ணும் பணியில் வட சென்னையில் 357 நபர்கள், தென் சென்னையில் 374 நபர்கள், மத்திய சென்னையில் 380 நபர்கள் மற்றும் 322 அலுவலக உதவியாளர்கள் உட்பட மொத்தம் 1,433 பணியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு பணி வழங்கும் ஆணைகள், ரிப்பன் மாளிகையில், மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலையில் இன்று காலை நடைபெற்றது. அதன்படி, சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் பணி இடங்களை கணினி குலுக்கல் ஒதுக்கும் பணி நடைபெற்றது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ற்கான சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை இரண்டாம் கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ரிப்பன் கட்டட வளாக அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் டாக்டர் டி. சுரேஷ், இ.ஆ.ப., (Dr. D. Suresh, I.A.S.,), திரு. கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, இ.ஆ.ப., (Mr.Kartikay Dhanji Budhdhabhatti, I.A.S.,), . , …, (Thiru. Muddada Ravichandra, I.A.S.,), . , திரு. ராஜேஷ் குமார், எஸ்.சி.எஸ்., (Mr. Rajesh Kumar, SCS.,), திரு. ஜிதேந்திர ககுஸ்தே,எஸ்.சி.எஸ்., (Mr. Jitendra Kakuste, SCS.,), உள்பட அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “வெளிப்படையான முறையில், இந்த பணி ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறும். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.