டில்லி:

நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் கமிஷனும், சட்ட ஆணையமும் வருகிற 16-ந் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக சட்ட ஆணைய தலைவர் பி.எஸ்.சவுகான் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் செலவை குறைக்கும் வகையில், நாட்டின் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று மோடி தலைமயிலான மத்திய பாஜ அரசு தெரிவித்து வருகிறது.

இதற்கு மத்திய நிதிஆயோக்கும்,  இந்திய தேர்தல் கமிஷனும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்நிலையில், இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டு உள்ளது.

இது தொடர்பாக அரசியல் சாசன நிபுணர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடம்  சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. தற்போதைய அரசியல் சாசனப்படி ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடத்த  வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடத்த தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் செயல் திட்டங்கள சட்ட ஆணையம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி முதல் கட்டமாக 2019-ம் ஆண்டும், இரண்டாம் கட்டமாக 2024-ம் ஆண்டு பல மாநிலங்களின் சட்டசபை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் கமிஷனர் ஓம் பிரகாஷ் ராவத்,  குதிரைக்கு முன்பாக நாங்கள் வண்டியை பூட்ட விரும்பவில்லை. ஏனென்றால் இதில் சட்ட ரீதியாக அணுகவேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அந்த சட்ட வடிவமைப்பு உருவாகாதவரை நாங்கள் எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

தேர்தல் ஆணையம் ஏற்கனவே, இதுபோன்று இரண்டு தேர்தலை நடத்த வேண்டுமென்றால் அதற்கான வாக்கு எந்திரங்கள் வாங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில்,  ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் கமிஷனும், மத்திய சட்ட ஆணையமும் முறைப்படியான பேச்சுவார்த்தையை  வருகிற 16-ந் தேதி டில்லியில் தொடங்குகிறது.

இதுகுறித்து  சட்ட ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான பி.எஸ்.சவுகான், தேர்தல் நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்குத்தான்  உள்ளது என்று கூறி உள்ளார்.