சென்னை:
சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் அமளியால், சபை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டசபை நிகழ்ச்சியை அதிகாரிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பிய விவகாரம் குறித்து திமுக சட்டப்பேரவை துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது:
“சட்டசபை நிகழ்ச்சிகளை வேறு எங்கும் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது. ஆனால் நீங்கள் பக்கத்து அறையில் பார்க்க வசதி செய்துள்ளீர்கள். இது பெரிய குற்றம். இந்த குற்றத்தை நீங்களே செய்திருக்கிறீர்கள்” என்று குற்றம்சாட்டினார்.
துரைமுருகன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், “என் அனுமதி வாங்கித்தான் அங்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது என் உரிமை. பேரவைத் தலைவரின் அதிகாரமாகும்.
எனவே பேரவைத் தலைவர் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. அதை ஏன் என்று நீங்கள் கேட்கவும் முடியாது. இதில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்தார்.
பேரவை தலைவரின் பதிலை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து கோஷ மிட்டனர். இதன் காரணமாக சபையில் கடும் அமளி ஏற்பட்டது. பின்னர் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தையா பேசினார். அப்போது 89 வயல்காட்டு பொம்மைகள் என திமுக உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கி பேசினார்.
இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து, அவரது பேச்சை சபைக்குறிப்பில் இருந்து நீக்குமாறும் முழக்கமிட்டனர்.
சபாநாயகர் முத்தையாவின் பேச்சை நீக்க மறுத்தார். இதனால் திமு, காங்கிரஸ் கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
அமளி காரணமாக சபாநாயகர் சபை நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். அமளி நீடித்த நிலையில் சட்டசபை அலுவல்கள் இன்று நிறைவு பெறுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து திமுக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.