அசாம் மாநிலம் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் நவம்பர் மாதம் துப்பிரி முதல் சதியா வரை 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

குவஹாத்தி-யில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய ஒற்றுமை பயணத்தை குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் 2024 மக்களவை தேர்தலுடன் இதனை தொடர்புபடுத்துவது தவறு இது ராகுல் காந்தியின் லட்சிய பயணம், இது அவரது தவம்” என்று தெரிவித்தார்.

2023 ம் ஆண்டு குஜராத் மாநிலம் போர்பந்தர் முதல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பரசுராம் குந்த் வரை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மற்றொரு இந்திய ஒற்றுமை பயணத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், அசாமில் நவம்பர் 1 ம் தேதி துவங்க இருக்கும் இந்த யாத்திரையை தொடர்ந்து மற்ற மாநில காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மக்களுடன் தொடர்பு கொள்ளும் இதேபோன்ற யாத்திரை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பத்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில் 200 கி.மீட்டரை இன்று நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.