அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்ற வாலிபரின் பிறப்புறுப்பை அவரது அனுமதியின்றி மருத்துவர் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான அடிகுர் ரஹ்மான், ஜூன் 19ம் தேதி சில்சாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார்.

பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று குறித்து பரிசோதித்த மருத்துவர் பயாப்ஸி பரிசோதனை செய்ய அவரை அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு பயாப்ஸி செய்யப்பட்ட நிலையில், மயக்கத்தில் இருந்து கண் விழித்துப் பார்த்தபோது அறுவை சிகிச்சை மூலம் தனது பிறப்புறுப்பு அகற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து மருத்துவரிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் எதுவும் கூறாத நிலையில் தனது அனுமதியில்லாமல் தனது பிறப்புறுப்பை அகற்றிய மருத்துவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதேவேளையில், அந்த மருத்துவர் தலைமறைவானதுடன் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அடிகுர் ரஹ்மான் தனது வாழ்க்கை முடிந்துவிட்டதாகப் புலம்பி வருவதுடன் இந்த விவகாரம் தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.