தில்புர்கர் , அசாம்
பா ஜ க ஆட்சி செய்யும் அசாம் மாநில அமைச்சரின் மேல் பா ஜ க வின் பாராளுமன்ற உறுப்பினரே லஞ்சக் குற்றம் சாட்டி உள்ளதற்கு முதல் அமைச்சர் ஆதாரங்களை கேட்டு உள்ளார்.
அசாம் மாநிலத்தின் பா ஜ ஆட்சி புரிந்து வருகிறது. அதன் முதல்வர் சர்பானந்த சொனோவால் அமைச்சரவையில் நீர்ப்பாசனம் மற்றும் கைத்தறித்துறை அமைச்சராக ரஞ்சித் தத்தா பதவி வகிக்கிறார். பா ஜ க பாராளுமன்ற உறுப்பினர் சர்மா, நீர்ப்பாசனத் துறையில் தரப்படும் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ஒப்பந்த தாரரிடம் இருந்து அமைச்சர் 10% கமிஷன் வாங்குவதாக கூறினார்.
சர்மா அசாமில் உள்ள தேஜ்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் கடந்த் செவ்வாய் அன்று உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அனைத்து அமைச்சர்களும் கமிஷன் வாங்குவதாகவும், அதிலும் அமைச்சர் ரஞ்சித் தத்தா 10% கமிஷன் வாங்குவது தமக்கு நிச்சயம் தெரியும் என கூறினார்.
இந்த செய்தி பரப்பராக பரவத் தொடங்கியது. இதற்கு அமைச்சர் தத்தா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் “சர்மாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் கமிஷன் வாங்கும் பழக்கம் கொண்டவன் இல்லை. சர்மா தேவை இல்லாமல் பொய்க் குற்றச்சாட்டுகளை சொல்லி அரசையும் கட்சியையும் கேவலம் செய்கிறார். இதற்கு முன்பு முதலமைச்சரை பற்றியும் தேவையற்ற பொய்ப் புகாரை கூறினார்” என பதில் அளித்தார்.
தனது சொந்த ஊரன தில்புர்கர்க்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அசாம் முதல்வர் சொனோவால் இது பற்றி, “எனது அரசு எப்போதும் ஊழலையும், லஞ்சத்தையும் சகித்துக் கொள்ளாது. இது குறித்து எந்த ஒரு ஆதாரம் இருந்தாலும் சர்மா என்னிடம் தரலாம். அவை உண்மையாக இருப்பின் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே லஞ்சக் குற்றத்திற்காக எனது அரசு இதுவரை 56 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை அளித்துள்ளது.” என கூறி உள்ளார்.