தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்து 13 பேர் பலியானதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பரவலாக குரல் எழுந்திருக்கும் நிலையில், “எதற்கெடுத்தாலும் ராஜினாமா என்பதை ஏற்க முடியாது” என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை இன்று தூத்துக்குடியில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

“சமூகவிரோதிகள் நுழைந்ததால் போராட்டம் திசை மாறியது. புனிதமான போராட்டம் ரத்தக்களறியானது.

காவல்துறையினரை தாக்கியவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களது படங்களை தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிட வேண்டும். அந்த சமூகவிரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள்.  மக்களுக்கு எதுவும் தெரியாது என அரசியல் கட்சிகள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எல்லாம் தெரியும்.

எதற்கெடுத்தாலும்  ராஜினாமா ராஜினாமா என்பதை ஏற்க முடியாது. ராஜினாமா என்பது தீர்வாகாது.

காயமடைந்தவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அளித்திருக்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் அளிக்க இருக்கிறேன்” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.