சென்னை:
மறைந்த ராம்குமார் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்டு அவரது தந்தை பரமசிவம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 24ந் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வழக்கில் செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். அவர் சிறையில் சமையலறையில் உள்ள மின்சார வயரை வாயால் கடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டது.
ஆனால், ராம்குமாரின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் சந்தேகம் எழுப்பினர். இதுகுறித்து ஐகோர்ட்டில், ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனு தாக்கல் செய்தார்.
ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில் தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டும் ஏற்க மறுத்தது. அதன் காரணமாக டில்லி ஏய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் ராம்குமார் உட்ல் பரிசோதனை செய்ய நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
அதையடுத்து ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம் முடித்து சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இன்று ராம்குமார் தந்தை பரமசிவம் சார்பாக வழக்கறிஞர் சங்கரசுப்பு நீதிபதி முன் ஆஜராகி,
‘ராம்குமாரின் உடலை டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்து விட்டனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இதுகுறித்து என் கட்சிக்காரர் பரமசிவன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தார்.
இதற்கு நீதிபதி கிருபாகரன், ‘பிரேத பரிசோதனை அறிக்கையை இறந்தவரின் உறவினர்களுக்கு வழங்கவேண்டும் என்று விதிகள் இருந்தால், அதுகுறித்து உத்தரவிட தயாராக உள்ளேன்.
நீங்கள் வழக்கு தாக்கல் செய்யுங்கள். அந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படும்’ என்று கூறினார்.