சென்னை,
அதிமுகவின் தலைமை யார் என்று தமிழக முதல்வர் எடப்பாடியிடம் கேளுங்கள் என்று அதிமுக எம்.பி.யான மு.தம்பித்துரை காட்டமாக கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உடைந்த அதிமுக அணியில், சகிகலா தலைமையிலான அதிமுக அம்மா அணியில் தற்போது பல குழுக்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.
டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததை தொடர்ந்து அதிமுக அம்மா அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் தனி அணியாகவும், தலித் எம்.எல்.ஏக்கள் தனி அணியாகவும், தோப்பு வெங்கடாசலம் தலைமையில்எம்.எல்.ஏக்கள் தனி அணியாகவும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 34 எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ்ச்செல்வன் தலைமையில் தனி அணியாக எடப்பாடி அரசுக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதிமுகவின் அனைத்து அணிகளும் பாரதியஜனதா வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன.
ஜனாதிபதி ஆதரவு அளிப்பது குறித்து, தம்பித்துரை, டிடிவி தினகரன் ஆகியோர் பெங்களூர் சிறைச்சாலையில் சசிகலாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது, இங்கே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.
இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்பியான தம்பித்துரையிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர் கூறியதாவது,
கட்சி தலைமையில் உத்தரவு படியே குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதாகவும், இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார்.
மேலும் செய்தியாளரின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த தம்பித்துரை, தலைமைக்கழகம் யார் என்பது பொதுமக்களுக்கு தெரியும் என்றும்,
அதிமுகவின் தலைமை யார் என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் தாம் கேட்க வேண்டும் என்றும் காட்டமாக கூறினார்.
அதிமுகவில் எந்த அணிகளும் இல்லை என்றும் கருத்து வேறுபாடு மட்டும் தான் உள்ளது, அதிமுகவின் பொதுச்செயலாளரை நீக்கும் உரிமை எங்களுக்கு இல்லை என கூறிய தம்பிதுரை, தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் நடக்கிறது பாஜக ஆட்சி இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று ராம்நாத் கோவிந்துக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தம்பிதுரை தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறினார்.
ஆன்மீக நம்பிக்கையால் திமுகவினர் கோயில் குளங்களைத் தூர்வாருகின்றனர் என்று கூறிய அவர், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஆதரவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இரட்டைக்குவளை முறை நடைமுறையில் உள்ளது வருந்தத்தக்கது என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தம்பித்துரையின் இந்த சுளீர் பேச்சு அதிமுகவினரிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.