டில்லி:

நேஷனல் ஹெரால்டு வழக்கில், இந்திய கேள்வி எழுப்பிய வழக்கறிஞரிடம், ஆங்கிலத்தில் மட்டுமே தன்னிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கண்டிப்பாக கூறினார்.

நேரு பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதை தொடர்ந்து, ‘அசோசியேட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் சொத்துகளை ‘யங் இந்தியன்’ என்ற நிறுவனத்தின் மூலம் முறைகேடாக கையகப்படுத்தியதாக அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும்  ராகுல் காந்தி, கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு ஏற்கனவே டில்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றம் அறிவுறுத்தலின் பேரில், டில்லி கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, மனுதாரரான பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தரப்பு வழக்கறிஞர் சீமா  குறுக்கு விசாரணை நடத்தினார்.

அப்போது, சாமியிடம், வழக்கறிஞர் இந்தியில் பல கேள்விகளை எழுப்பியதால்7, கடுப்படைந்த சாமி, இந்தியில் கேள்வி எழுப்ப கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆங்கிலத்தில் மட்டுமே தன்னிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கறாரா க கூறினார்.

நான் தமிழன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்புங்கள். நீதிமன்றத்தின் அலுவல் மொழியும் ஆங்கிலமே என்று கூறினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சமர் விஷால், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளும் நீதிமன்றத்தின் அலுவல் மொழிகள்தான் என்று குறிப்பிட்டார். பின்னர், சம்ஸ்கிருதம் கலந்த இந்தியை என்னால் புரிந்துகொள்ள முடியும்; உருது கலந்த ஹிந்தியை அல்ல என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.