புதுடெல்லி: அடுத்தமாதம் புதுடெல்லியில் நடைபெறவிருந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, தீவிர கொரோனா பரவல் காரணமாக, துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்திய குத்துச்சண்டை பெடரேஷன், துபாய் குத்துச்சண்டை பெடரேஷனுடன் இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்தமாதம்(மே) 21 முதல் 31ம் தேதிவரை, டெல்லியிலுள்ள இந்திராகாந்தி உள்ளரங்க ஸ்டேடியத்தில் நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டெல்லியில், தற்போது கொரோனாவின் ஒருநாள் பாதிப்பு 20000க்கும் மேலாக உள்ளது.
மேலும், இந்தியா தொடர்பான பல பயணக் கட்டுப்பாடுகளும் உள்ளன. எனவே, நிலைமை குறித்து, ஆசிய குத்துச்சண்டை பெடரேஷனுடன் கலந்தாலோசித்தது இந்திய குத்துச்சண்டை பெடரேஷன். இதனையடுத்து, இந்தாண்டு சாம்பியன்ஷிப் போட்டியை, துபாய்க்கு மாற்றுவதென முடிவு செய்யப்பட்டது.
இப்போட்டியை, இந்திய குத்துச்சண்டை பெடரேஷனும், துபாய் குத்துச்சண்டை பெடரேஷனும் இணைந்து நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.