தோஹா

த்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டின் கோமதி மாரிமுத்து ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் முதல் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ஆசிய தடகள சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து கலந்துக் கொண்டார். இவர் தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் 30 வயதாகும் கோமதி மாரிமுத்து 800 மீ தூரத்தை 2 நிமிடம் 2.7 வினாடி நேரத்தில் கடந்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் கோமதி சற்றே பின் தங்கி இருந்தார். முதல் கட்டத்தின் கடைசி பகுதியில் மிகவும் பின் தங்கி இருந்த அவர் தனது அபார ஓட்டத்தினால் முதல் இரு போட்டியாளர்களுடன் சேர்ந்தார்.

இறுதி கட்டத்தில் மூவரின் முதலாவதாக வந்த போதிலும் சீன வீராங்கனை இவரை முந்த முயன்றார். ஆனால் இறுதியாக கோமதியின் சுறுசுறுப்பான ஓட்டத்தினால் அவர் சீன வீராங்கனை வாங் சுன்யு வை தோற்கடித்து முதல் இடத்தை பிடித்தார். இரண்டாவதாக வந்த சீன வீராங்கனை 800 மீ தூரத்தை 2 நிமிடம் 2.96 வினாடிகளில் கடந்தார்.

இது குறித்து கோமதி மாரிமுத்து, “நான் முடிவுக் கோட்டை தாண்டி விட்டேன் என்பதை என்னால் உணர முடியவில்லை. அவ்வளவு ஒரு பரபரப்பில் இருந்தேன். பந்தயத்தின் கடைசி 150 மீட்டர்கள் மிகவும் கடினமாக இருந்தது” என கூறி உள்ளார். இந்த போட்டியில் கோமதி இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

                         தஜிந்தர்

ஆசிய விளையாட்டு போட்டி சாம்பியனான தஜிந்தர் பால் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் 20.22 மீ தூரம் எறிந்து இந்தியாவின் இரண்டாம் தங்கப்பதக்கத்தை வென்றார். ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மகளிர் தடை தாண்டும் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் இந்தியாவின் சரிதாபென் கெய்க்வாட் 57.23 விநாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஆடவருக்கான 400 மீ தடை தாண்டும் போட்டியில் ஜபிர் மதாரி வெண்கலம் வென்றுள்ளார்.

ஷிவ்பால் சிங் மற்றும் ஜபிர் மதாரி ஆகியோர் வரும் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள உலக தடகளப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.