கொழும்பு: ஆசியக் கோப்பை தொடர், இந்தாண்டு நடைபெற்றால், அது இலங்கையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பாகிஸ்தான் தனது உரிமையை இலங்கைக்கு விட்டுக் கொடுத்துள்ளது.
இந்த தொடர், வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, ஆசியக்கோப்பை தொடரை நடத்தும் உரிமையை வரும் 2022ம் ஆண்டு பெற்றுள்ளது. ஆனால், பாகிஸ்தான் இந்தாண்டு இத்தொடரை நடத்தும் தனது உரிமையை விட்டுக்கொடுத்துள்ளது.
ஏனெனில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான சீரற்ற அரசியல் உறவின் காரணமாக, இந்திய அணி பாகிஸ்தான் சென்று பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, இந்தியா மறுத்துவிட்டால், இத்தொடரே சுவாரஸ்யம் இழந்துவிடும். எனவேதான், பாகிஸ்தான் இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், இந்த ஆசியக் கோப்பைத் தொடர் நினைத்தபடி நடக்குமா? என்ற வலுவான கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், இந்தியா – இலங்கை இடையிலான இருதரப்பு தொடரே இன்னும் உறுதிசெய்யப்படாமல் உள்ளது. மேலும், குறைந்தபட்சம் 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடரை நடத்துவதெல்லாம், இந்த சூழலில் மருத்துவரீதியாக பெரும் சவாலான ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.