டில்லி:
வாகன விற்பனை சரிவைத் தொடர்ந்து பிரபல கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், தனது நிறுவனத்தின் எண்ணூர், ஓசூர் ஆலைகளை தற்காலிகமாக மூடி உள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
மோடிஅரசின் நிர்வாக சீரழிவு காரணமாக இந்திய பொருளாதாரம் கடுமையான இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், ஆட்டோபைல் துறை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆலைகளை மூடிவருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்தும், மாநில அரசுகள் வருவாயை இழந்தும் தவித்து வருகின்றது.
இந்த நிலையில், பிரபல மோடர் வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனமும் கடுமையாக வாகன விற்பனை சரிவை எதிர்கொண்டுள்ளது. அசோக் லேலண்ட் வாகன விற்பனை சுமார் 70 சதவிகிதம் குறைந்து உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் நிறுவனத்தின் நலனுக்காக என்று கூறி எண்ணூரில் உள்ள நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்திருந்தது. இந்த நிலையில், தற்போது 16 நாட்கள் விடுமுறை அளித்து உள்ளது.
அதன்படி கடந்த 4ந்தேதி (செப்டம்பர்) முதல் 20ந்தேதி வரை, வாகன உற்பத்தி ஆலை நிறுத்தப்படு வதாகவும், இதன் காரணமாக விடுமுறை விடப்படுவதாகம் அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
இந்த நாட்களில் ஊழியர்கள் யாரும் நிறுவனத்திற்கு வரவேண்டாம் என்றும், விடுமுறை நாட்கள் சம்பளம் தொடர்பாக ஊழியர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
அதுபோல அசோக் லெலண்ட் நிறுவனத்தின் ஓசூரில் உள்ள வாகன உற்பத்திப்பாகங்கள் தயாரிக்கும் கிளை நிறுவனத்திலும் 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
‘இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் சென்னை எண்ணூரிலுள்ள அசோக் லேலண்ட் நிறுவனமும் உற்பத்தியை நிறுத்தி உள்ளதால், தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது.