புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவராக அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.


மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

எனினும், அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது.
ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடரவேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், பதவி விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டால், தற்போதைய துணை முதல்வர் சச்சின் பைலட் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.