டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். இதனால், ராகுல்காந்தி போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், கெலாட் எதிர்த்து சசிதரூர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை இதற்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24 ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
இந்த தேர்தலில் ராகுல்காந்தியை போட்டியிட வைக்க பலமுறை முயற்சித்த நிலையில், அவர் போட்டியிட மறுத்துவிட்டார். இதையடுத்து, தலைவர் பதவிக்கு யார் யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சசிதருர், கெலாட்டும் அவ்வப்போது தலைமை பதவி குறித்து கருத்து தெரிவித்து வந்ததுடன், தற்போதைய இடைக்கால தலைவர் சோனியாவை சந்தித்தும் பேசி வந்தனர். இதனால் போட்டி எழும் வாய்ப்பு உருவானது.
தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், தலைமை பதவிக்கான தேர்தலின் தான் போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வேண்டாம் என்பதில் சோனியா காந்தி குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக ராகுலிடம் பலமுறை வலியுறுத்தியும், அவர் ஏற்க மறுத்துவிட்டார், அதனால், நான் போட்டியிடுகிறேன் என்றவர், வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிப்பேன் என்றார்.
நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம் என்றவர், நான் கட்சித் தலைவரானால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய்மாக்கன் மற்றும் கட்சித் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற நிலை இருக்கும்போது தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அசோக் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்தால், அந்த பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சச்சின் பைலட் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதற்கிடையில், காந்தி குடும்பத்தினரை தவிர வேறு யாரும் தலைமைப்பதவிக்கு போட்டியிட்டால், தானும் போட்டியிடுவேன் என சசிதரூர் ஏற்கனவே கூறியுள்ள நிலையில், அவரும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராஜ்யசபா தலைவர் கார்கே, திக்விஜய்சிங் உள்பட உள்பட வேறு சிலரும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் 24ந்தேதி தொடங்குகிறது… முழு விவரம்…
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார்! அசோக் கெலாட்