லண்டன்: ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 135 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து.

இதன்மூலம் கடந்த 2001ம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டுமென்ற ஆஸ்திரேலியாவின் கனவு மறுபடியும் பொய்த்துப்போனது.

ஆனால், கடந்தமுறை கோப்பையை வென்ற அணி என்ற முறையில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக்கொண்டது ஆஸ்திரேலியா.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 294 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 225 ரன்களும் எடுத்தன. பின்னர், இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 329 ரன்களை அடிக்க, ஆஸ்திரேலிய அணிக்கான இலக்காக 398 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

சவாலான இலக்கை ஆஸ்திரேலிய அணி எட்டிவிடும் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேக் லீச் போன்றோர் அதை அனுமதிக்கவில்லை. அவர்கள் இருவரும் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்தமுறை பெரிதாக ரன் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இத்தொடரில் அவர் 50 ரன்களுக்கு குறைவாக ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. மொத்தம் 7 இன்னிங்ஸ் விளையாடிய அவர் எடுத்த ரன்கள் 774. எனவே, அவர் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்து சென்றபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்து மரியாதை செய்தனர்.

டேவிட் வார்னர் இத்தொடர் முழுவதுமே சொதப்பினார். ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் மட்டுமே போராடி 117 ரன்களை அடித்தார். மற்றவர்கள் யாரும் அதிகபட்சமாக 30 ரன்களைக்கூட தொடவில்லை.

கடந்த 1972ம் ஆண்டிற்கு பிறகு, ஆஷஸ் தொடர் ஒன்று டிரா ஆகியிருப்பது இதுதான் முதன்முறை. ஆனாலும், கோப்பையை ஏற்கனவே வைத்திருந்த ஆஸ்திரேலியா அதை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.