டில்லி
ஏசாட் ஏவுகணை சோதனையால் விண்வெளிக் குப்பைகள் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 27 ஆம் தேதி அன்று டிஆர்டிஓ ஒரிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து ஏசாட் என்னும் ஏவுகணையை செலுத்தி சோதனை செய்தது. இந்த சோதனையில் ஏசாட் ஏவுகணை மூன்று நிமிடங்களில் பூமிக்கு மேலே சென்றுக் கொண்டிருந்த மைக்ரோசாட் ஆர் என்னும் ஏவுகணையை தாக்கி தகர்த்தது. இதனால் பூமியின் பரப்புக்கு 300 கிமீ மேலே உள்ள விண்வெளிப் பரப்பில் இந்த செயற்கைக் கோள் 300 துண்டுகளாக சிதறியதாக கூறப்படுகிறது.
இதனால் விண்வெளியில் குப்பைகள் சேர்ந்துள்ளதாகவும் இந்த குப்பைகளால் அடுத்துச் செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் பாதிப்படையும் எனவும் கூறப்படுகிறது. நாளை இந்தியாவின் பிஎஸ்எல்வி ரக செயற்கைக் கோள் ஒன்று செலுத்தப்பட உள்ளது. ஏசாட் ஏவுகணை பரிசோதனை முடிந்து ஆறு நாட்களே ஆகும் நிலையில் இந்த புதிய செயற்கைக் கோளுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து டி ஆர் டி ஓ முன்னாள் தலைவர் சரஸ்வத், “இது உண்மைதான். ஆனால் தற்போது விண்வெளியில் ஏற்கனவே ஏராளமான குப்பைகள் மிதந்துக் கொண்டு இருக்கின்றன என்பதை நாம் மனதில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு முறை செயற்கைக் கோள்கள் வானில் நிறுவப்படும் போதும் சுமார் 100 – 150 துகள்கள் வானில் குப்பைகளாகின்றன. அவை போல்ட், சூடு பாதுகாப்பு தகடு, அல்லது எதுவாகவும் இருக்கலாம்.
இந்த துகள்கள் விண்வெளியில் தொடர்ந்து மிதந்துக் கொண்டிருக்கும். செயற்கைக் கோளின் வேகத்துடன் இந்த துகள்களும் வானில் சுற்றிக் கொண்டிருக்கும். இந்த வேகம் காரணமாக இந்த பொருட்கள் செயர்கைக் கோளின் பாதையில் குறுக்கிட வாய்ப்புக்கள் உண்டு. அதனால் விண்வெளிக் குப்பைகளை அகற்ற வேண்டும் என கூறப்படுகிறது.
அத்துடன் ஒரு புதிய பெரிய செயற்கைக் கோள்களை நிறுவும்போது உருவாகும் குப்பைகளில் பாதி அளவுக்கும் குறைவான துகள்களே ஏவுகணை சோதனையில் உருவாகும்.
இஸ்ரோ ஒவ்வொரு முறை செயற்கைக் கோள்களை செலுத்தும் போதும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. எனவே ஏசாட் ஏவுகணை சோதனையால் உண்டான துகளகளைப் பற்றி அஞ்சத் தேவை இல்லை” என தெரிவித்துள்ளார்.