ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானாவை தாண்டி தனது கிளைகளை பரப்பி வருகிறது. அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் அந்த கட்சி போட்டியிட்டது.
சிறிய கட்சிகளுடன் உடன்பாடு வைத்திருந்த ஒவைசி கட்சி 5 தொகுதிகளில் வென்று ஆச்சர்யப்படுத்தியது.
இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறப்போகும் மே.வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.
“குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாரத் பழங்குடியின கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம்” என ஒவைசி கட்சியின் குஜராத் மாநில தலைவர் சபீர் கபுலிவாலா தெரிவித்துள்ளார்.
“குஜராத் மாநில பா.ஜக. அரசு முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட்டோர், பழங்குடியின மக்கள் நலனை புறக்கணித்து விட்டது” என அவர் குற்றம் சாட்டினார்.
உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்ய ஒவைசி வருவதாக குறிப்பிட்ட கபுலிவாலா, அகமதாபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசுவார் என்றார்.
– பா. பாரதி