திருப்பதி

திருப்பதி கோவில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து தரிசனத்தை நிறுத்த காவல்துறை தேவஸ்தானத்துக்கு யோசனை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுவதை அடுத்துக் கடந்த மார்ச் மாதம் மக்கள் கூட்டமாகக் கூட தடை செய்யப்பட்டது  அதையொட்டி திருப்பதி உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களின் தரிசனம் நிறுத்தப்பட்டது   அதன் பிறகு ஊரடங்கு தளர்வு காரணமாகச் சென்ற மாதம் 8 ஆம் தேதி முதல் திருப்பதி கோவில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு தினசரி சுமார் 12500 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில நாடுகளுக்கு முன்பு அர்ச்சகர்கள் 18 பேர் உள்ளிட்ட தேவஸ்தான ஊழியர்கள் 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.   ஆயினும் தேவஸ்தானம் பக்தர்களின் தரிசனத்தை நிறுத்த மறுத்து விட்டது.   கோவிலின் பூஜைகளைக் கண்காணித்து வரும் சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் மற்றும் சடகோப்ர ராமானுஜ சிறிய ஜீயர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி அவர்கள் சீடர்கள் 20க்கும் மேற்பட்டோர் தனிமைப் படுத்தப்பட்டு நேற்று பிசிஆர் பரிசோதனை நடந்துள்ளது.  அனைத்து கைங்கரியங்களையும் முன்னின்று நடத்தும் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கைங்கரியங்களை யார் கவனிப்பது எனக் கேள்வி எழுந்துள்ளது.

திருப்பதி கோவிலில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் காவல்துறையினர் சில நாட்களுக்கு தரிசனத்தை நிறுத்தி வைக்குமாறு தேவஸ்தானத்துக்கு யோசனை தெரிவித்துள்ளனர்   இது குறித்து தேவஸ்தானம் இதுவரை ஏதும் அறிவிக்காமல் உள்ளது.