வாஷிங்டன்
வட கொரியா கேட்டுக் கொண்டபடி பொருளாதார தடை நீக்கத்துக்கு அமெரிக்க மறுப்பு தெரிவித்ததால் டிரம்ப் – கிம் சந்திப்பு முடிவுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஆகியோர் வியட்நாம் தலைநகரான ஹனோயியில் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். சிங்கப்பூரில் இதற்கு முன்பு நடந்த முதல் கட்ட பேச்சு வார்த்தையின் போது வட கொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு குறித்தும் அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்தும் பேசப்பட்டது.
தற்போது நடந்த பேச்சு வார்த்தையின் போது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அமெரிக்கா ஒப்புக் கொள்ளவில்லை. வட கொரியா அமெரிக்கா கேட்டுக் கொண்ட படி அனைத்து அணு ஆயுதங்களையும் அழித்து விட வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் வட கொரியாவின் அணு ஆயுத விவரங்கள் குறித்து அமெரிக்கா முழுவதும் தகவல்கள் தெரிவித்துள்ளது. அதைக் கண்டு வட கொரிய அதிபர் வியப்பு அடைந்துள்ளார். மேலும் கிம் அணு ஆயுதங்களை அழிப்பதாக சொல்லிய பல இடங்கள் அமெரிக்கா தெரிவித்த இடங்கள் இல்லை என கூறப்படுகிறது.
ஆகவே இந்த சந்திப்பு முடிவுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், “இந்த சந்திப்பு இடையில் முடிவடைந்தாலும் எங்களுக்கிடையில் நட்பு தொடர்கிறது. மேலும் கிம் விரைவில் ராக்கெட்டுகளையும் அணு ஆயுதங்களையும் முழுமையாக அழித்து விடுவதாக சொன்னதை செய்து காட்டுவார் என நான் நம்புகிறேன். ” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் எதுவும் வாக்குறுதி அளிக்கவில்லை என வெள்ளை மாளிகை தெரிவிக்கிறது.