சென்னை

சென்னை நகரில் தற்போது மழை நின்றுள்ளதால் சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.

கடந்த சனிக்கிழமை முதல் பெய்து வந்த தொடர் கன மழையால் சென்னை நகரம் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது.  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை மேலும் வலுவடைந்தது.  தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் மழை நின்றுள்ளது.

எனவே சென்னை நகருக்கு விடப்பட்டிருந்த மிக கன மழைக்கான ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.   நகரின் பல பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் கே கே எஸ் ஆர் ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.  இருப்பினும் கனமழைக்கான எச்சரிக்கை தொடர்வதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.  கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான வருகை நிறுத்தப்பட்டிருந்தன. சுமார் 5 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.  தற்போது விமானச் சேவை சீரடைந்துள்ளது.