சென்னை
அமெரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவனமான பிஃபிசர் தனது சென்னை மற்றும் ஔரங்காபாத் தொழிற்சாலைகளை மூட உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் பிஃபிசர் ஆகும். இந்த சர்வதேச நிறுவனம் இந்தியாவில் சென்னை, ஔரங்காபாத், கோவா, விசாகப்பட்டினம் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் மருந்து தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் அமெரிக்க நாட்டுக்காக பென்சிலின் உள்ளிட்ட பல ஆண்டி பாயட்டிக் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த தொழிற்சாலைகள் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப் படுகின்றன. சென்னை அருகே உள்ள இருங்காட்டுக் கோட்டை மற்றும் மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் அகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் மருந்து தயாரிப்பதில் பல தவறுகள் மற்றும் சட்ட மீறல்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதை ஒட்டி அமெரிக்காவின் மருந்து தயாரிப்பு கட்டுப்பாட்டுத் துறை இந்த தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தியது.
ஆய்வில் புகார்களில் கண்டுள்ளது உண்மை என கண்டறியப்பட்டது. அதனால் சென்னை மற்றும் ஔரங்கபாத்தில் அமைந்துள்ள இந்த இரு தொழிற்சாலைகளையும் மூட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற தொழிற்சாலைகளின் உற்பத்தி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொழிற்சாலைகளிலும் சுமார் 1700 பேர் பணி புரிந்து வருகின்றனர். இதனால் அவர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.