அமிதாப் போன்றவர்கள் நடிக்கமுடியாது….அரசின் புது விதி…
ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடரும் நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
மும்பை சினிமா உலகம் படப்பிடிப்பை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நிபந்தனை இந்தி திரை உலகத்து ஆட்களைத் தூக்கி வாரிப்போட்டுள்ளது.
‘’படப்பிடிப்பில் 65 வயதுக்கு மேற்பட்டோரைப் பங்கேற்கச் செய்யக்கூடாது’’ என்பது பிரதான நிபந்தனை.
அந்த நிபந்தனையின் படி பார்த்தால் அமிதாப்பச்சன் சினிமாவில் நடிக்க முடியாது. மணிரத்னம் இந்தி சினிமாவை இயக்க முடியாது.
அதிர்ந்து போன அங்குள்ள இயக்குநர்கள், மகாராஷ்டிர முதல் –அமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு, இந்த விதியை மாற்றச்சொல்லி கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய சினிமா மற்றும் டி.வி.இயக்குநர் சங்க தலைவர் அசோக் பண்டிட் , எழுதிய கடிதத்தில், இந்தி சினிமாவில் 65 வயதுக்கு மேல் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்டோரின் பெயரை குறிப்பிட்டு, இவர்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
’
அமிதாப்பச்சன், அனுபம் கேர், நசாருதீன் ஷா, தர்மேந்திரா, மிதுன் சக்ரவர்த்தி, ஜாக்கிஷெராப், டினு ஆனந்த் போன்ற நடிகர்கள் 65 வயதைக் கடந்தவர்கள் என்பதை அந்த கடிதத்தில் அசோக்பண்டிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
மணிரத்னம், மகேஷ்பட், சுபாஷ் கை, குல்சார், ஜாவேத் அக்தார், ஷியாம் பெனகல் போன்ற ஜாம்பவான்களும் 65 வயதை தாண்டியவர்கள் என்பதைத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் சங்கத் தலைவர், எனவே 65 வயதுக்கு மேற்பட்டோர் ஷுட்டிங்கில் கலந்து கொள்ளக்கூடாது என்று மாநில அரசு விதித்துள்ள விதியை மாற்ற வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.