மாஸ்கோ
ரஷ்யாவில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஆற்றில் 20000 டன் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் அதிபர் புடின் அவசரநிலை பிறப்பித்துள்ளார்.

ரஷ்யாவில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள சைபீரியா மாகாணத்தில் நோரில்ஸ்மிக் என்னும் நகரில் மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மின்நிலையம் அருகே அம்பர்ன்யா என்னும் நதி ஓடுகிறது. மின் நிலையத்தில் உள்ள ஒரு எண்ணெய் தொட்டியில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதையொட்டி தொட்டியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20000 டன் எண்ணெய் முழுவதும் ஆற்றில் கலந்துள்ளது.
இச்சம்பவம் நடந்து இரு தினங்களுக்கு பிறகே அதிகாரிகள் ஆற்றில் எண்ணெய் கலந்ததை கண்டு பிடித்துள்ளனர். உடனடியாக ஆற்றில் கலந்த எண்ணெய்யை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆயினும் தற்போது அம்ப்ரன்யா நதி எண்ணெய் கலப்பால் சிவப்பு நிறத்துடன் காட்சி அளிக்கிறது. இங்குள்ள மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் காணொளிக் காட்சி மூலம் பேசிய போது எண்ணெய் கசிவைத் தாமதமாகக் கண்டுபிடித்த அதிகாரிகள் அலட்சியத்தைக்கடுமையாகக் கண்டித்தார். அத்துடன் இந்த பகுதி முழுவதும் அவசரநிலை பிறபித்துள்ளதாகவும் மாகாண ஆளுநருக்கு இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எண்ணெய் கசிவால் ஆற்றில் சுமார் 350 சதுர கிமீ பரப்புக்கு மாசு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு அகண்ட பகுதியை சுத்தம் செய்வது கடினம் என்பதால் இந்தப் பணிகள் உடனடியாக முடிவடைய வாய்ப்பில்லை என சுற்றுச்சூழல் அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன.

இந்த எண்ணெய் கசிவை உண்டாக்கிய மின் நிறுவனம் உலகின் புகழ்பெற்ற நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தி செய்யும் நிறுவனமான நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆடும் நோரிக்ஸ்க் நிறுவனம் இது போல் எண்ணெய் கசிவு விபத்தை உண்டாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
[youtube-feed feed=1]