‘’பாதுகாப்பு’ இல்லாததால் ராஜினாமா செய்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி..
அரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பத்திரத்துறை இயக்குநராக இருக்கும் பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராணி, தனது பதவியை நேற்று( திங்கள்கிழமை) திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
’’எனது தனிப்பட்ட பாதுகாப்பு காரணத்தால் ராஜினாமா செய்கிறேன்’’ என்று ஒற்றை வரியில், பதவி விலகலுக்கான காரணத்தை சுட்டிக்காட்டியுள்ள ராணி, மாநில அரசின் தலைமை செயலாளருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அவர், சிர்சா மாவட்டம் தாபாவலியில் துணை ஆட்சியராக இருந்தபோது, உயர் அதிகாரி ஒருவர் , தன்னை ’’துன்புறுத்துவதாக’’ புகார் தெரிவித்து இருந்தார்.
’’தனக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டி பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவால், தெரிவித்துள்ளார்.
’பெண் அதிகாரிக்கே இந்த கதி என்றால் மாநிலத்தில் யாருக்குத்தான் பாதுகாப்பு?’’ என்று கேள்வி எழுப்பியுள்ள சுர்ஜிவால்,’’ உங்கள் அரசின் தோல்விக்கு இந்த ஒரு உதாரணம் போதும்.’’ என்று அரியானா முதல்வரை விமர்சித்துள்ளார்.