டில்லி

புல்வாமா தாக்குதலுக்காக துக்கம் அனுசரிக்காத பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 44 சிஆர்ப்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதனால் நாடே துக்கத்தில் ஆழ்ந்தது.  ஆனால் பாஜகவினர் இதை பின்பற்றவில்லை எனபலரும் குறை கூறி வருகின்றனர்.   இந்த நேரத்திலும் அமித்ஷா தேர்தல் பரப்புரை செய்ததிலும்,  பியூஷ் கோயல் தமிழ் நாட்டில் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, “புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதால் நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.  ஆனால்  பிரதமர் மோடி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என அறிவிக்கவில்லை    நாடு முழுவதும் உள்ள மக்களில் பலர் தங்கள் வீட்டில் நடந்த சோகம் போல் இதை கருதுகின்றனர்

ஆனால் பிரதமர் மோடி டிஸ்கவரி சேனலுக்காக ஒரு ஆவணப் பட படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார்.    நாடே துக்கம் அனுசரிக்கும் போது அந்நாட்டின்பிரதமர் நான்குமணி நேரம் படகு சவாரியிலும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதிலும் ஈடுபட்டுள்ளார்.   தனது பொது நிகழ்வுகளை ரத்து செய்ய மனமில்லாததால் தான் அவர் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என அறிவிக்கவில்லை என தோன்றுகிறது.

போரில் மரணம் அடைந்த வீரரின் இறுதி ஊர்வலத்தில் பாஜக பாராளுமன்ர உறுப்பினர் சாக்‌ஷி மகராஜ் சிரித்தபடி செல்கிறார்.   மத்திய பாஜக அமைச்சர் அல்போன்ஸ் மரணம் அடைந்த வீரரின் உடலோடு ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.    இவை யாவும் கடும் கண்டனத்துக்குறியதாகும்.

எங்களுக்கு உங்களுக்காக சில கேள்விகள் உள்ளன.

1.       நீங்கள் பாதுகாப்பு குறைபாட்டுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா?

2.       உள்ளூர் தீவிரவாதிகளிடம் இந்த அளவுக்கு ஆர்டிஎக்ஸ் மற்றும் எம்4 போன்ற வெடி மருந்துகள் எவ்வாறு கிடைத்தன?

3.       தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் தாக்குதலுக்கு 48 மணி நேரம் முன்பு வெளியிட்ட வீடியோவை சட்டை செய்யாதது ஏன்?

4.        நீங்கள் வீரர்களை வான்வழி பயணத்துக்கு ஏன் அனுமதிக்கவில்லை?  வீரர்களின் உயிரின் மதிப்பை விட அது அதிகம் செலவாகுமா?”

என கேட்டுள்ளார்.