மதுரை போடி நாயக்கனூர்அகல ரெயில் பாதை பணிகள் உசிலம்பட்டி வரை நிறைவு : இன்று சோதனை ஓட்டம்

Must read

துரை

துரை மற்றும் போடி நாயக்கனூர் இடையிலான அகல ரெயில்பாதைப் பணிகள் உசிலம்பட்டி வரையில் நிறைவடைந்ததை ஒட்டி இன்று சோதனை ஓட்டம் நடந்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டு வரை மதுரை-போடி இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டன. அதன் பின்னர் இந்த வழித்தடத்தை அகலப் பாதையாக மாற்றுவதற்காக ரெயில்கள் நிறுத்தப்பட்டு மீட்டர் கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன.  ஆயினும் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் பல ஆண்டுகள் பணி நடைபெறாமல் இருந்தது.

கடந்த இரண்டு வருடங்களில் இத்திட்டத்துக்கு தலா ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதனால் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.  தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் பொதுமக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை எடுத்துச் சொல்லி விரைவில் பணியை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையொட்டி மதுரை போடிநாயக்கனுர் இடையிலான ரெயில் பாதைகள் பணி விறுவிறுப்பாக நடைபெற்றன.  இந்த திட்டத்தில் மொத்தம் உள்ள 90 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை-உசிலம்பட்டி மற்றும் உசிலம்பட்டி-போடி என இரு பிரிவுகளாகப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மதுரை-போடி அகலப் பாதை திட்டத்தில் முதற்கட்டமாக 37 கிலோ மீட்டர் தூரமுள்ள மதுரை-உசிலம்பட்டி இடையேயான பணிகள் முடிவடைந்துள்ளன.    இந்தப் பாதையில் உள்ள நாகமலை புதுக்கோட்டை, கீழ்க்குயில்குடி, பல்கலைக்கழகம், செக்கானூரணி ஆகிய பகுதிகளில் பாலம் அமைக்கப்பட்டு இறுதி கட்ட வேலைகள் முடிவடைந்தன.

இதையொட்டி இன்று மதுரையிலிருந்து _உசிலம்பட்டி வரையிலான அகல ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

More articles

Latest article