வாஷிங்டன்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு ரத்தம் உறைதல் ஏற்படுவதால் அதற்குத் தடை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.
கொரோனா உலகெங்கும் மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது. இதையொட்டி அனைத்து உலக நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு நிறுவன தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அவற்றில் அமெரிக்காவில் போடப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசியும் ஒன்றாகும்.
இந்த தடுப்பூசி ஒரே டோசாக செலுத்தப்படக்கூடியதாகும். இதுவரை அமெரிக்காவில் 68 லட்சம் பேருக்கு மேல் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பெண்களுக்கு ரத்தம் உறைதல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணை முடிவு வரும் வரை இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரே டோஸ் தடுப்பூசிக்குத் தடை விதிப்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
தற்போது இந்தியாவில் மேலும் 5 மருந்துகளுக்கு அக்டோபர் முதல் அவசரக் கால அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரே டோஸ் தடுப்பூசியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.