டில்லி

ள்நாட்டில் கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட உள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  உலக அளவில் கொரோனா பரவலில் 3ஆம் இடத்தில் உள்ள இந்தியாவில் இதுவரை 1.16 கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டு 1.60 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதில் 1.11 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 3.31 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இவை கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகள் ஆகும்.  இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா கண்டுபிடிப்பாகும்.  இதை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்து வருகிறது.

கோவிஷீல்ட் மருந்து இதுவரை 5.20 கோடி டோஸ்கள் 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  இதைத் தவிர சில நாடுகளுக்கு 80 லட்சம் டோஸ் மருந்துகள் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன.   தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் இடம் பிரேசில், சௌதி அரேபியா, மொரக்கா ஆகிய நாடுகள் தலா இரண்டு கோடி டோஸ்கள் ஆர்டர் கொடுத்துள்ளன.

தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  எனவே உள்நாட்டுத் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.  இதையொட்டி சீரம் இன்ஸ்டிடியூட்  வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணிகள் தாமதப்படும் என தெரிவித்துள்ளது.   தற்போது மாதத்துக்கு 7 கோடி டோஸ்கள் தயாரிப்பு உள்ள நிலையில் இந்தியாவுக்கு 10 டோஸ்கள் தேவை உள்ளதாகக் கூறப்படுகிறது.