டில்லி
இந்திய ரெயில்வே வரும் அக்டோபர் மாதம் முதல் டீசல் ஜெனரேட்டர் பெட்டி பயன்பாட்டை நிறுத்த உள்ளதால் 4 லட்சம் கூடுதல் படுக்கை வசதிகள் கிடைக்க உள்ளது.
தற்போது ரெயில்களில் எஞ்சின் மேல் உள்ள மின் கம்பிகளில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு எஞ்சினுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற பெட்டிகளுக்கு விளக்கு, மின்விசிறி மற்றும் ஏசி உள்ளிட்ட பயன்பாடுக்கு டீசல் ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் காற்று மாசு அடைவதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஏசி இல்லாத பெட்டிகளுக்கு மணிக்கு 40 லிட்டர் டீசலும் ஏசி பெட்டிகளுக்கு 60 முதல் 70 லிட்டர் டீசலும் தேவைப்படுகிறது. இதை மாற்ற தற்போது இந்திய ரெயில்வே அனத்து பெட்டிகள் மேலும் ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்த உள்ளது. அதன்படி ஒவ்வொரு பெட்டியிலும் எஞ்சின் மேல் உள்ள மின் கம்பிகளில் இருந்து மின்சாரம் எடுக்க உபகரணங்கள் பொருத்தப்பட உள்ளன.
இவ்வாறு பொருத்தப்படுவதால் டீசல் ஜெனரேட்டர் பெட்டிகள் சேர்க்க வேண்டிய நிலை இருக்காது. இதனால் டீசல் மிச்சப்படுவதுடன் காற்று மாசாவதும் பெருமளவு குறையும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. பசுமை திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மேலும் அதிக பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதால் வருடத்துக்கு 4 லட்சம் படுக்கை வசதி அதிகரிக்க உள்ளது.