டில்லி
அரசு வலைத்தளங்களில் மட்டுமே இருக்க வேண்டிய வாகன விவரங்கள் தனியார் தளங்களிலும் காணப்படுகிறது.
கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று vehice info (வாகன விவரம்) என டைப் செய்தால் சுமார் 200 மொபைல் செயலிகள் தென்படும். இதில் ஏதேனும் ஒரு செயலியின் உள்ளே சென்றால் சுமார் 10 நொடிகளில் வாகனப் பதிவு எண் மூலம் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கிடைக்கும். இந்த செயலிகள் தினமும் பலரால் தரவிறக்கம் செய்யப்படுகின்றன.
இவற்றில் மிகச் சொற்பமான அளவில் மட்டுமே அரசு செயலிகள் உள்ளன. ஆனால் அரசு செயலிகள் அல்லாத மற்ற செயலிகளில் எப்படி இந்த விவரங்கள் வெளிவந்தன எனப் பலருக்கும் வியப்பு அல்லது சந்தேகங்கள் இருக்கலாம், இதற்குக் கிடைக்கும் ஒரே பதில் சட்டவிரோதமாக வெளிவந்துள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியாவில் உள்ள சுமார் 28.5 கோடி வாகன விவரங்களை மத்திய அரசு வாகன என்னும் வலைத்தளத்தில் நிர்வகித்து வருகிறது. இந்த தள விவரங்கள் விற்பனை செய்யக்கூடியவை ஆகும். இந்த விவரங்களை வாகன தொழிற்சாலைகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆய்வு நிலையங்கள் உள்ளிட்டவற்றால் வாங்க முடியும்.
தகவலறியும் சட்டப்படி கிடைத்த தகவலில் இந்த விற்பனையின் மூலம் 2014 முதல் 2019வரை மத்திய சலை போக்குவரத்து துறை ரூ.68 கோடி வருமானம் ஈட்டி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அரசு செய்யலாமா என்னும் கேள்வி ஒருபுறம் இருக்க இந்த தகவலில் கடந்த 2019 ஆம் வருடம் மட்டும் 127 தனியார் நிறுவனங்களுக்கும் 15 அரசு நிறுவனங்களுக்கும் இந்த வாகன விவரங்கள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
வாகன விவரங்கள் என்பது அந்த வாகன உரிமையாளரின் தனியுரிமையானதாகும். இந்த விவரங்களைத் தனியாருக்கு அளிப்பது என்பது தனியுரிமை மீறல் எனக் கொள்ளலாம். தனியுரிமை விவர பாதுகாப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மசோதாவில் மக்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்கள் அனுமதி இன்றி மற்றொருவருக்கு அளிக்க அரசுக்கு உரிமை இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின்படி ஒருவர் தனது தனியுரிமை விவரங்கள் அளிக்க சம்மதம் அளித்தாலும் இதனால் அவருடைய அல்லது மற்றவருக்குப் பாதகம் உண்டாகும் என்றால் அந்த விவரங்களை அளிக்கக்கூடாது என உள்ளது. குறிப்பாக ஒரு வாகன விவரம் தெரிந்தால் அந்த பதிவை வேறு ஒருவருக்கு மாற்றுவது மிகவும் எளிதாகும். அதாவது வாகனம் விற்பனை செய்யப்படாமலே வேறு ஒருவர் வாங்கியதாகக் காட்ட முடியும்.
முன்பு தெரிவித்தபடி வாகன் வலைத்தளத்தில் இருந்து இரண்டு விதமாக விவரங்கள் பெற முடியும். கடந்த 2012 ஆம் ஆண்டின் விதிப்படி ஒருவர் குறிப்பிட்ட வாகன விவரங்களை அதற்கான கட்டணம் செலுத்திப் பார்வையிட்டு அதைப் பெற முடியும் ஆனால் 2019 ஆம் வருட விதிப்படி ஒருவருக்கு நிறைய விவரங்கள் தேவை என்றால் அவர் ரூ,3 கோடி கட்டணம் செலுத்துவதன் மூலம் அனைத்து விவரங்களையும் தரவிறக்கம் செய்ய முடியும் என்பதாகும்.
எனவே இந்த விவரங்களைப் பெற்றவர் மற்ற தளங்களுக்கு இதை அளித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது ஓரிருவர் மட்டும் கட்டணம் செலுத்தி விட்டு அதை மற்ற அனைவருக்கும் விற்பனை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வாகன விவரங்களை விற்பதை நிறுத்த வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.