டில்லி
மத்திய அரசு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 1700 கோடியைத் தாண்டியதால் பிரபல மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளிப்பதை நிறுத்த உள்ளது
மத்திய அரசு பொதுச் சுகாதாரத் திட்டத்தின் கீழும் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் சலுகை சிகிச்சை திட்டத்தின் கீழும் சுமார் 37 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் பல பிரபல மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக பல உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான தொகையை அரசு செலுத்தி வந்தது.
ஆனால் இந்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் வெகுநாட்களாக நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பிரபல மருத்துவமனைகளான, அதிக அளவில் நிலுவைத் தொகையில் மாக்ஸ், ஃபோர்டிஸ், நாராயணா, அப்போலோ மற்றும் மேதாந்தா ஆகிய மருத்துவமனைகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இந்த இரு திட்டங்களில் மத்திய அரசு பொதுச் சுகாதார திட்டச் சிகிச்சை பாக்கி ரூ.1000 கோடியும் முன்னாள் ராணுவத்தினர் சலுகை சிகிச்சை திட்டப் பாக்கி ரூ.700 கோடி அளவிலும் பாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்திய மருத்துவமனைகள் சங்கம் இது குறித்து கூட்டம் ஒன்றைக் கூட்டி விவாதித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் கிரிதர் ஞானி, “தற்போது அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.1700 கோடியைத் தாண்டி உள்ளது. மேலும் ரூ.3500 கோடிக்கான பில்கள் இன்னும் ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே நாங்கள் இலவச சிகிச்சைகளை வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
மேலும் இன்று முதல் நிலுவைத் தொகையைப் பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாடெங்கும் உள்ள மருத்துவமனைகளுடன் பேச உள்ளோம். இந்த திட்டங்களின் கீழ் 50,000 க்கும் அதிகமான சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் இந்த நிலுவைத் தொகை அதிகரிப்பால் மருத்துவமனைப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் நாங்கள் இந்த திட்டத்தில் இருந்து முழுமையாக விலகுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.