சென்னை

மிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்ததையொட்டி மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலின் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன் பிடிக்கச் செல்வோருக்கு 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமலாக்குவது வழக்கமாகும்.   இதன் மூலம் மீன் வளம் பெருகும் என்பதால் அரசு இந்த தடையை விதிக்கிறது.  மேலும் இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்கி வருகிறது.

அவ்வகையில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.  இதனால் படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.   சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இதைப் போல் நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், செந்தூர் உள்ளிட்ட சுமார் 64 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும், தூத்துக்குடி  பகுதியில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது மீனவர்கள் படகுகளைச் சுத்தம் செய்தல், பழுது நீக்குதல், வளைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.  கடந்த பல மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களில் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.  எனவே தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்தல் தங்களுக்குப் படகுகளைப் பராமரிப்பதில் சிரமம் இருக்காது என மீனவர்கள்  அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தி பிரசுரமாகும் வரை அரசு தரப்பில் இருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை.