டில்லி
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதையே விவசாயச் சங்கங்கள் விரும்புவதால் குழுவை விரும்பவில்லை என வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் பரத் பூஷன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்,
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் சுமார் 50 நாட்களாக டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தைக் கைவிடக் கோரி மத்திய அரசு நடத்தி வரும் பலகட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன. அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டங்கள் கைவிடப்படாது என சங்க்ங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு அளித்துள்ளனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான போபண்ணா மற்றும் ராமசுப்ரமணியம் ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகின்றது. இந்த வழக்கில் விவசாயிகள் சார்பில் பரத் பூஷன் மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோர் வாதாடி வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி அன்று அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. தலைமை நீதிபதி பாப்டே, “வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் போது விபரீதம் ஏதும் நடந்தால் நாம் அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த அமர்வு யாருக்கும் காயங்களோ அல்லது யாருடைய கரத்திலும் ரத்தக்கறை ஏற்படுவதையோ விரும்பவில்லை.
மத்திய அரசு இந்த விவகாரத்தில் சரியான முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கைகள் எடுக்கும். இது குறித்து விவாதிக்க ஒரு குழு அமைக்கப்படும்.” என எச்சரித்து இருந்தது. அதன்படி ஒரு குழு அமைத்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடந்தது. அப்போது துஷ்யந்த் தவே மற்றும் பாத் பூஷன் ஆகியோர் இந்த குழுவின் விசாரணையில் விவசாயக் குழு எதுவும் கலந்துக் கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
பரத் பூஷன் மற்றும் துஷ்யந்த் தவே ஆகிய இருவரும், “ இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தாமலும் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயச் சங்கங்கள் இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதே முழுமையான தீர்வுக்கு வழி ஆகும் எனக் கருதுகின்றன. எனவே உச்சநீதிமன்றம் அமைத்துள்ள எந்த குழுவின் விசாரணையிலும் சங்கங்கள் கலந்துக் கொள்ள விரும்பவில்லை.” எனத் தெரிவித்துள்ளனர்.