சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், புதிய சபாநாயகராக மூத்த எம்எல்ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. திமுக வேட்பாளர்கள் 125 இடங்களிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால் சட்டமன்றத்தில் திமுகவின் எண்ணிக்கை 133ஆக உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள ஸ்டாலின் முதல்வராகவும், அவருடன் 33 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றுக்கொண்டது.

இதையடுத்து, புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வகையில் 11ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்தார். அதைடுத்து, இன்று தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி எம்எல்ஏ பொறுப்பேற்றார். அவர் நாளை சபையை நடத்துவதுடன், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலையும் நடத்த உள்ளார்.,

இந்த நிலையில், திமுக சார்பில்,  சபாநாயகராக ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ அப்பாவு நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இவர் கடந்த  2016 சட்டமன்றத் தேர்தலிலும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 40 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனால் அதிமுகவுக்கு சாதகமாக தபால் வாக்குகளை செல்லாததாக அறிவித்ததாக அப்பாவு குற்றம் சாட்டியதோடு, நீதிமன்றத்தையும் நாடினார். ஐந்து ஆண்டுகளாக போராடியும் அதில் முடிவு எட்டப்படாத நிலையில் அடுத்த தேர்தல் வந்து அப்பாவு எம்எல்ஏ ஆகிவிட்டார். அதேபோல் இம்முறை துணை சபாநாயகராக தற்போது தற்காலிக சபாநாயகராக உள்ள கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ கோவி.செழியன் தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.