விருதுநகர்
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத சில அதிமுகவினர் அமமுகவில் இணைந்து வருகின்றனர்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக, பாமக, பாஜக, தமாகா போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் இறங்குகின்றன. அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதையொட்டி ஒரு புறம் ஆதரவு இருந்தாலும் மறுபுறம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கரூர் போன்ற பகுதிகளில் தொண்டர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் சாத்தூர், விருதுநகர் பகுதிகளில் எதிர்ப்பு உள்ளது.
தற்போது அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ராஜவர்மனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அவர் டிடிவி தினகரனைச் சந்தித்து அமமுக வில் இணைந்துள்ளார். அப்போது அவர் தமக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் துணை முதல்வரை தமது விவகாரத்தில் ஏமாற்றி உள்ளதாகவும் குற்றம் தெரிவித்தார்.
இந்நிலையில் விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கோகுலம் தங்கராஜ் தனக்குத் தேர்தல் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார். அவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே அவரும் அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்துள்ளார். மேலும் வேட்பாளர் பட்டியல் குறித்து தோப்பு வெங்கடாசலம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.