டில்லி

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தோல்வியில் முடிந்துள்ளதால்  அடுத்த நடவடிக்கை என்ன என ராகுல் காந்தி கேட்டுள்ளார்.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி ஊரடங்கை அமல்படுத்தியது.   அதன் பிறகும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேலும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.  ஆயினும் பாதிப்பு அடைவோர் மற்றும் உயிர் இழப்போர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று காணொளி மூலம் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அந்த சந்திப்பில் ராகுல் காந்தி, “கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு அமல்படுத்தினால் குறையும் என அறிவித்தது.  ஆனால் இந்தியாவில் இதுவரை ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் கொரோனா வைரஸ் மிகவும் உக்கிரமாகப் பரவி வருகிறது.  இவ்வாறு உள்ள நிலையில் அரசு ஊரடங்கு விதிகளைத் தளர்த்தி வருகிறது.  இது மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

மத்திய அரசு அமல்படுத்தி வரும் ஊரடங்கு முழுத் தோல்வியில் முடிந்துள்ளது  எனவே மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்து என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது?   இதற்காக அரசு எடுக்கப்போகும் ஆக்க பூர்வ நடவடிக்கைகள் என்னென்ன?  ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சிரு குறு தொழில் முனைவோர், சாமானிய பொதுமகளுக்கு உதவ மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” எனச் சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.