வாஷிங்டன்

மெரிக்கக் கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கு வசிக்கும் கருப்ப இன ஏழை மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இங்கு இதுவரை 17.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.   இதில் நியூயார்க், மிச்சிகன், லூசியானா, வாஷிங்டன் உள்ளிட்ட14 முக்கிய நகரப் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.  இந்நிலையில் தற்போது கிராமப்பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கிராமப்பகுதிகளில் விளைநிலங்கள், இறைச்சி பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அதிகம் உள்ளன.  இங்குள்ளவர்கள் அனைவரும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் ஆவார்கள்..  மேலும் இங்கு அதிக அளவில் கருப்பு இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இங்குள்ளோருக்கு நீரிழிவு, உடல் பருமன் அதிகம் உள்ளன.  அத்துடன் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தோர் ஆவார்கள். எனவே இங்குப் பாதிப்பு அடைந்தால் மரண எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

குறிப்பாகக் கடந்த மாதத்தில் கொரோனா அதிகம்  பரவி உள்ள சிறிய கிராமப்பகுதிகளில் அதிக அளவில் சுகாதார அமைப்புக்கள் மற்றும் மருத்துவமனைகள் இல்லை.  எனவே இங்குப் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.  இந்தப் பகுதிகளில் பல இடங்களில் பரிசோதனை நடக்காததால் பாதிப்பு குறித்த சரியான எண்ணிக்கைகள் இன்னும் அறியப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.